< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் 91-வது வயதில் நடிகையை பிரியும் தொழில் அதிபர்
உலக செய்திகள்

அமெரிக்காவில் 91-வது வயதில் நடிகையை பிரியும் தொழில் அதிபர்

தினத்தந்தி
|
24 Jun 2022 5:46 AM IST

ரூபர்ட் முர்டாக் மற்றும் நடிகை ஜெர்ரி ஹால் இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர் ரூபர்ட் முர்டாக் (வயது 91). இவர் அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல், இங்கிலாந்தின் தி சன், தி டைம்ஸ் ஊடகங்களின் அதிபராக உள்ளார். இவர் நடிகை ஜெர்ரி ஹாலை காதலித்து மணந்தார்.

இந்த திருமணம் 2016-ல் லண்டனில் நடந்தது. அப்போது ரூபர்ட் முர்டாக் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "நான்தான் உலகத்திலேயே அதிர்ஷ்டசாலி, மிக மகிழ்ச்சிகரமான நபர். இனி டுவிட்டரில் பதிவு வெளியிடுவதை நிறுத்திக்கொள்வேன்" என்று அறிவித்திருந்தார்.

ஆனால் தற்போது 6 ஆண்டுகள் ஆன நிலையில் இருவருக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு அவர்கள் பிரியப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை தொடங்கி இதுதான் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.

நடிகை ஹால், ஏற்கனவே ஜாகர் என்பவருடன் நீண்டநாள் உறவில் இருந்து 4 குழந்தைகளை பெற்றுக்கொண்டவர். இந்தோனேசியாவில் திருமணத்தில் இணைந்த இந்த ஜோடி, ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு பின்னர் லண்டன் கோர்ட்டில் விவாகரத்து பெற்று பிரிந்தது.

ரூபர்ட் முர்டோக்கை பொறுத்தமட்டில் ஆஸ்திரேலிய விமான பணிப்பெண் பேட்ரிசியா புக்கர், ஸ்காட்லாந்து பத்திரிகையாளர் அன்னா மான், சீன தொழில் அதிபர் வெண்டி டெங் என 3 பேரை திருமணம் செய்து, விவாகரத்து செய்துகொண்டவர். அவர்கள் மூலம் 10 குழந்தைகளை பெற்றெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்