நியூசிலாந்து பெண் பிரதமரிடம் நிருபர் எழுப்பிய அதிர்ச்சி கேள்வியும், பதிலும்
|நிருபர் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னிடம் எழுப்பிய கேள்வி, அவர்களை அதிர வைத்து விட்டது.
பின்லாந்து நாட்டின் பெண் பிரதமர் சன்னி மரின் (வயது 37), முதல்முறையாக நியூசிலாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு ஆக்லாந்தில் அவர் அந்த நாட்டின் பெண் பிரதமரான ஜெசிந்தா ஆர்டர்னை (வயது 42) நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரு தரப்பிலும் ஓரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், "உக்ரைன் இறையாண்மை விவகாரம், காலநிலை மாற்றம், ஈரானின் பெண்கள், பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கவலைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தனர். அப்போது ஒரு நிருபர் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னிடம் எழுப்பிய கேள்வி, அவர்களை அதிர வைத்து விட்டது. அந்தக் கேள்வி இதுதான்-
"நீங்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே வயதினர் என்பதற்காகவும், பொதுவான விஷயங்கள் நிறைய இருப்பதாலும் நீங்கள் இருவரும் சந்திக்கிறீர்களா என்று நிறைய பேருக்கு ஆச்சரியமாக இருக்கிறதே?". இருவரின் வயது உள்ளிட்ட தனிப்பட்ட ஒற்றுமை பற்றி நிருபர் கேள்வி எழுப்பியபோது அவர்கள் இருவருமே அதிர்ந்து போனார்கள்.
சுதாரித்துக்கொண்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், "எனது முதல் கேள்வி, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும், நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜான் கீயும் ஒரே வயதில் இருந்ததால்தான் சந்தித்தார்களா, இந்தக் கேள்வியை அவர்களிடம் யாரேனும் கேட்டதுண்டா? உங்களின் இந்தக் கேள்வி ஆச்சரியமாக இருக்கிறது." என பதில் அளித்தார். (ஒபாமாவும், ஜான் கீயும் பதவியில் இருந்த போது அதிகமுறை சந்தித்துப் பேசி உள்ளனர். அவர்கள் பதவியை விட்டு வந்த பின்னரும் கூட ஒரு முறையாவது ஒன்றாக கோல்ப் விளையாடுவதைக் காண முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது.)
பின்லாந்து பிரதமர் மரின், "நாங்கள் பிரதமர்களாக இருப்பதால் சந்திக்கிறோம். எங்களுக்கு இடையே பொதுவான பல விஷயங்கள் உள்ளன. நாங்கள் ஒன்றாகச் செய்யக்கூடிய பல விஷயங்கள் உள்ளன" என பதில் அளித்தார்.
இதையொட்டிய வீடியோ, டுவிட்டரில் வெளியாகி குறுகிய நேரத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.