5-ம் சுற்று பேச்சுவார்த்தையிலும் பலன் இல்லை.. பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடிப்பு
|பாகிஸ்தானில் தேர்தல் முடிந்து 12 நாட்கள் ஆகியும், மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த 8-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 336 இடங்களில் 266 இடங்கள் மட்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவை. எஞ்சிய 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஆட்சியமைக்க ஒட்டுமொத்தமாக 169 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
மக்களால் தேர்ந்தெடுக்கவேண்டிய 266 உறுப்பினர்கள் பதவிகளில் 265 உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் தேர்தல் நடத்தப்படவில்லை. 133 இடங்களைக் கைப்பற்றினால் ஆட்சியமைக்க முடியும். ஆனால் எந்த கட்சியும் அந்த இலக்கை எட்டவில்லை.
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் (பி.டி.ஐ.) கட்சியின் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வெற்றி பெற்றனர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) 75 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன. முத்தாகிதா குவாமி இயக்கம் 17 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இம்ரான் கான் ஆதரவாளர்கள் அதிக அளவில் வென்றபோதும், அவர்களால் ஆட்சியமைக்க முடியாத சூழல் உள்ளது. இதையடுத்து, ஆட்சியமைப்பதற்காக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியும் கூட்டணி அமைத்தன. ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுகிறது. பிரதமர் பதவி, மந்திரிகள் மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து இரு கட்சிகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரீபும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோவும் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்தனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்தியும், பிரதமர் பதவி மற்றும் அதிகாரப்பகிர்வு குறித்த திட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.
நேற்று மாலையில் 5ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் மூத்த தலைவரும் செனட்டருமான இஷாக் தாரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் குழுவில் முராத் அலி ஷா, கமர் ஜமான் கைரா, நதீம் அப்சல் சான் மற்றும் பலர் இருந்தனர்.
சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இரவு 10 மணிக்கு மீண்டும் கூடி விவாதிக்கலாம் என கூறி தற்காலிகமாக பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. ஆனால் 10 மணிக்கு கூட்டம் நடைபெறவில்லை. அதன்பின்னர் கூட்டம் நிறைவடைந்ததாக இரவு 11 மணியளவில் அறிவிக்கப்பட்டது. அடுத்த கூட்டம் புதன்கிழமை (நாளை) தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ, நவாஸ் கட்சியின் முயற்சியை பின்வாங்கச் செய்து, தான் பிரதமர் ஆவதற்காக புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்துவதாக பேசப்படுகிறது. அதாவது, இம்ரான் கான் ஆதரவு எம்.பி.க்கள் சன்னி இத்தேஹாத் கவுன்சிலில் இணைந்துள்ளனர். அவர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனென்றால் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சி பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்க வாய்ப்பு இல்லை என்று ஏற்கனவே கூறியிருக்கிறது.
தேர்தல் முடிந்து 12 நாட்கள் ஆகியும், மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. வரும் 29-ம் தேதிக்குள் புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தின் முதல் கூட்ட தொடரை கூட்ட வேண்டும். அதற்குள் அதிகாரப் பகிர்வு தொடர்பாக இரு முன்னணி கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும் என நம்பப்படுகிறது.
முத்தாகிதா குவாமி இயக்கம் தனது ஆதரவை பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சிக்கு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.