இலங்கைக்கு நிதி உதவி: நிர்மலா சீதாராமன் உள்பட 3 பெண் தலைவர்களுக்கு ரணில் விக்ரமசிங்கே புகழாரம்
|நிர்மலா சீதாராமன் உள்பட 3 சர்வதேச பெண் தலைவர்களால்தான் இலங்கையின் நெருக்கடி தணிந்து வருவதாக ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார்.
கொழும்பு,
பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு இந்தியா பெருமளவில் நிதியுதவியை வழங்கியது. இதற்காக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே பாராட்டி உள்ளார். பெண்கள் தினத்தையொட்டி நேற்று கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நிர்மலா சீதாராமன் உள்பட 3 சர்வதேச பெண் தலைவர்களால்தான் இலங்கையின் நெருக்கடி தணிந்து வருவதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'இலங்கையின் நெருக்கடி நேரத்தில் 3 பெண் தலைவர்கள் உதவியுள்ளனர். அவர்களில் முதன்மையானவர் இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன். நாங்கள் திவாலாகி விட்டோம் என்று அறிவித்த பிறகும், அவர்தான் பிரதமர் மற்றும் மந்திரிசபையுடன் பேசி, எங்களுக்கு 3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்க முடிவு செய்தார்' என பாராட்டினார்.
மேலும் அவர், 'திவாலான நாட்டுக்கு கடன் கொடுப்பது மிகவும் துணிச்சலான முடிவு. இதற்காக முதலில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்த 3 பில்லியன் டாலர் இல்லையென்றால் நாம் எவ்வளவு மோசமாக இருந்திருப்போம் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை' என்றும் தெரிவித்தார். இதைப்போல அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் எல்லன், சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டினா ஜார்ஜிவா ஆகிய பெண் தலைவர்களையும் பாராட்டினார்