மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் பாதிப்பு... பக்கிங்ஹாம் அரண்மனை பரபரப்பு அறிக்கை
|புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து அரச பரம்பரையின் தற்போதைய அரசர், மூன்றாம் சார்லஸ் (வயது 75). இவரது தாயார் அரசி இரண்டாம் எலிசபெத் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். அதை தொடர்ந்து மூன்றாம் சார்லஸ் அரசராக பதவி ஏற்றார்.
சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சினையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் லண்டனில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அரசருக்கு புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டு உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. புரோஸ்டேட் சிகிச்சைக்காக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், 'புரோஸ்டேட் சிகிச்சைகாக மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற போது மேலும் சில பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு நடந்த பரிசோதனையில் அவருக்கு புற்றுநோயின் ஒரு வகை கண்டறியப்பட்டு உள்ளது. இதற்காக மன்னருக்கு வழக்கமான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மன்னர் சிகிச்சையில் இருப்பதால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனினும் சிகிச்சை கால கட்டத்தில் அரசு பணிகள் மற்றும் ஆவண பணிகளை அரசர் வழக்கம் போல் மேற்கொள்வார். மன்னர் விரைவில் குணமடைந்து பொதுபணிக்கு திரும்புவார்' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.