< Back
உலக செய்திகள்
உடனடி தாக்குதல் நடத்த தயார் - அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்
உலக செய்திகள்

'உடனடி தாக்குதல் நடத்த தயார்' - அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்

தினத்தந்தி
|
7 March 2023 10:26 AM GMT

அமெரிக்கா, தென்கொரியா மீது உடனடி தாக்குதல் நடத்த தயார் என்று வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல் விடுத்துள்ளார்.

பியாங்யாங்,

அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா - தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை தொடர்பாக மோதல் பிரச்சினை நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா மற்றும் அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

அதேவேளை, வடகொரியாவுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடன் சேர்ந்து தென்கொரியாவும் அவ்வப்போது ராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, கொரிய தீபகற்பத்தில் நேற்று அமெரிக்கா-வடகொரிய விமானப்படைகள் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டன. அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானமான பி-52 ரக விமானத்துடன் போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டன. இதனால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யொ ஜொங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா மற்றும் வடகொரிய பொம்மை ராணுவத்தின் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். நமது தீர்மானங்களின் அடிப்படையில் எந்த நேரத்திலும் உடனடி தாக்குதல் நடத்த நமது ராணுவம் எந்த நேரமும் தயார் நிலையில் உள்ளது' என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்