பாகிஸ்தானில் இந்து சிறுமி கடத்தல்; உறவினர்கள், வர்த்தகர்கள் போராட்டம்
|பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைப்பு, அனைத்து சமூகத்தினருக்கும் சம அந்தஸ்து வழங்குவதற்கான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று அரசை வலியுறுத்தினார்கள்.
கராச்சி,
பாகிஸ்தானில் பல பகுதிகளில் சிறுபான்மையின சிறுமிகளை கடத்துவதும், அவர்களை மதம் மாற்றி திருமணம் செய்வதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இதற்கு எதிராக சட்டங்களை கொண்டு வர அரசு முயற்சித்தபோதும், பல அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன் சிந்த் மாகாணத்தில், ஹோலி பண்டிகைகையையொட்டி, வீட்டில் இருந்த 2 சிறுமிகள் கடத்தப்பட்டனர்.
இந்நிலையில், சிந்த் மாகாணத்தில் சுக்கூர் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்த பிரியா குமாரி என்ற இந்து சமூக சிறுமி மர்ம நபர்களால் சில நாட்களுக்கு முன் கடத்தப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, இந்து சமூக உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒன்று கூடி தேரா முராத் ஜமாலி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிந்த் மாகாணத்தில் தொடர்ந்து சிறுமிகளை கடத்துவது அதிகரித்து காணப்படுகிறது.
இதுபற்றி சிந்த் மாகாண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், உடனடியாக பிரியாவை மீட்டு தரும்படியும் அப்போது அவர்கள் கோஷம் எழுப்பினர். இதில், இந்து சமூகத்தின் மூத்த உறுப்பினர்களான முகி மனக் லால் மற்றும் சேத் தாராசந்த் உள்ளிட்டோர் தலைமையில் பலரும் கலந்து கொண்டனர்.
வர்த்தகர்களான லியாகத் அலி சாகர், மீர் ஜன் மெங்கல், மொத்த விற்பனை சந்தையின் தலைவர் மவுலானா நவாபுதீன் தோம்கி, கான் ஜன் பங்குலாஜி மற்றும் ஹர்பல் தாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் சிந்த் மாகாண முதல்-மந்திரி முராத் அலி ஷா ஆகியோர் உடனடியாக மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமியை மீட்டு தந்து சிறுபான்மை சமூகத்தினருக்கு நீதி வழங்க வேண்டும் என்று அப்போது அவர்கள் வலியுறுத்தினர்.
இதேபோன்று, பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைப்பும், இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்து சமூகத்தினருக்கும் சம அந்தஸ்து வழங்குவதற்கான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர்கள் அரசை வலியுறுத்தினார்கள்.
கடந்த சில மாதங்களாக கிறிஸ்தவர்கள், இந்துக்கள், அகமதியாக்கள், சீக்கியர்கள் மற்றும் பிற சமூகத்தினர்கள், அவர்கள் மீது நடத்தப்படும் பல்வேறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் அந்த அமைப்பு சுட்டி காட்டியது.