இங்கிலாந்து இளவரசிக்கு என்னாச்சு..? எக்ஸ் தளத்தில் பரவும் பகீர் தகவல்
|செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் இளவரசி கேத் மிடில்டன் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து, எக்ஸ் தளத்தில் பயனர்கள் பலர் கேள்வி எழுப்பினர்.
லண்டன்:
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவியான இளவரசி கேத் மிடில்டன் கடந்த ஜனவரி மாதம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அவர் பொதுவெளியில் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து தொடர்ந்து எதிர்மறையான தகவல்கள் பரவின.
சமீபத்தில் அன்னையர் தினத்தையொட்டி அவர் வெளியிட்ட குடும்ப புகைப்படம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது, அவர் தனது குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டிருந்ததே இதற்கு காரணம். அதன்பின்னர் அவர் வருத்தம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். எனினும், ஒரிஜினல் புகைப்படத்தை கென்சிங்டன் அரண்மனை வெளியிடவில்லை.
இந்நிலையில், இளவரசி கேத் மிடில்டன் குறித்த வருத்தம் தரக்கூடிய செய்தி மீண்டும் பரவத் தொடங்கியது. லண்டனில் நேற்று நடந்த செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் இளவரசி கேத் மிடில்டன் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து, எக்ஸ் தளத்தில் பயனர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இளவரசி மறைந்துவிட்டதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் பதிவிட்டிருந்தனர். இளவரசியின் மரணம் குறித்து அவரது வழக்கறிஞர் ஒருவர் கூறியதாகவும் ஒரு நபர் குறிப்பிட்டிருந்தார். சிலர் இளவரசிக்காக பிரார்த்தனை செய்தனர்.
இந்த பதிவுகளைப் பார்த்த மற்ற பயனர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இளவரசி கேத் மிடில்டனுக்கு என்னாச்சு? அவர் மறைந்துவிட்டாரா? என்ன நடந்தது? யாராவது பதில் சொல்லுங்கள்? என்று கேட்க ஆரம்பித்தனர். இளவரசியை காட்டும்படி அரச குடும்பத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், இந்த தகவல்களின் உண்மைத்தன்மையை எக்ஸ் நிறுவனம் ஆராய்ந்தது. எதிர்மறையான தகவல்களின் உண்மைத்தன்மையை சரிபார்த்தது. இதில், இளவரசி கேத் மிடில்டன் மறைவு குறித்து வெளியான தகவலுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரியவந்திருப்பதாக எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இளவரசியின் வழக்கறிஞர்கள் சொன்னதாக வெளியிடப்பட்ட வீடியோ, அடையாளம் தெரியாத நபரால் பரப்பப்பட்டுள்ளதாகவும், அதில் உள்ள குரல் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் எக்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக அரச குடும்பம் தரப்பில் என்ன சொல்லப்போகிறார்கள்? என்பதை அறிய அனைவரும் காத்திருக்கிறார்கள்.