அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்.. நேரடி விவாதத்திற்குப் பிறகு முந்துவது யார்?
|நேரடி விவாதத்திற்கு பிறகு ராய்ட்டர்ஸ்/இப்சோல் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 47 சதவீத வாக்காளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நவம்பர் 5-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளுங்கட்சியான ஜனநாயக கட்சிசார்பில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோருக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது. இருவரும் தனது பிரசாரத்தை தீவிரப்படுத்திய நிலையில், மக்கள் மத்தியில் யாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது என்பதை முடிவு செய்ய அவ்வப்போது கருத்துக் கணிப்பு நடத்தப்படுகிறது. கடந்த 10-ம் தேதி இரு வேட்பாளர்களும் தொலைக்காட்சி நேரடி விவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேரடி விவாதம் மற்றும் அதற்கு முன்பு நடத்தப்பட்ட பல்வேறு கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருக்கிறார்.
குறிப்பாக நேரடி விவாதத்திற்கு பிறகு 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ராய்ட்டர்ஸ்/இப்சோல் நடத்திய கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 47 சதவீத வாக்காளர்களும், டிரம்புக்கு ஆதரவாக 42 சதவீத வாக்காளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். வித்தியாசம் 5 சதவீதம் இருந்தது.
நேரடி விவாதத்திற்கு பிறகு எகனாமிஸ்ட்/யூகோவ் நடத்திய கருத்துக்கணிப்பின்படி கமலா ஹாரிஸ் 4 சதவீத வித்தியாசத்துடன் முன்னிலையில் இருக்கிறார். கமலா ஹாரிஸ் 49 சதவீத வாக்காளர்களின் ஆதரவையும், டிரம்ப் 45 சதவீத வாக்காளர்களின் ஆதரவையும் பெற்றனர். நேரடி விவாதத்திற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 2 சதவீத வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்ற நிலையில், விவாதத்திற்கு பிறகு அவரது செல்வாக்கு மேலும் அதிகரித்திருப்பதையே கருத்துக் கணிப்பு காட்டுகிறது.
இதேபோல் ரியல் கிளியர் பாலிட்டிக்ஸ், பைவ்தர்ட்டிஎய்ட், சில்வர் புல்லட்டின் நடத்திய கருத்துக் கணிப்புகளிலும் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றார்.