< Back
உலக செய்திகள்
அமெரிக்க முன்னாள் அதிபர்  டிரம்ப் பொறுப்பற்றவர்: கமலா ஹாரிஸ் கடும் தாக்கு
உலக செய்திகள்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பொறுப்பற்றவர்: கமலா ஹாரிஸ் கடும் தாக்கு

தினத்தந்தி
|
23 Aug 2024 12:00 PM IST

டிரம்பை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் தீவிரமானதாக இருக்கும் என்று கமலா ஹாரிஸ் கூறினார்.

சிகாகோ,

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார்கள். தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியிருப்பதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் இரு தலைவர்களும் ஈடுபட்டுள்ளார்கள். ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா, பில் கிளிண்டன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

சிகாகோ நகரத்தில் நடைபெற்ற இந்த தேசிய மாநாட்டின் இறுதி நாளான இன்று கமலா ஹாரிஸ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அமெரிக்காவின் அதிபர் வேட்பாளராக, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். இந்தத் தேர்தலின் மூலம் நாம் முன்னோக்கி செல்லும் காலம் உருவாகும்.

அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு சிறந்த அதிபராக இருப்பேன் என்று நான் உறுதியளிக்கிறேன். நீங்கள் என்னை எப்போதும் நம்பலாம். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதர். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் தீவிரமானதாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் மக்கள் தான் எனக்கு எஜமானர்கள்" இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்