< Back
உலக செய்திகள்
காளி ஆவணப்படத்தை திரும்ப பெற வேண்டும் - கனடா இந்திய தூதரகம்
உலக செய்திகள்

'காளி' ஆவணப்படத்தை திரும்ப பெற வேண்டும் - கனடா இந்திய தூதரகம்

தினத்தந்தி
|
5 July 2022 4:37 AM IST

இந்து மத கடவுளை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள 'காளி' ஆவணப்படத்தை திரும்ப பெற வேண்டும் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஒட்டாவா,

ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை தான் இயக்கி உள்ள 'காளி' என்ற ஆவணப்படத்தின் போஸ்டர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த போஸ்டரில் இந்துக்களின் கடவுளான மகா காளி, சிகரெட் புகைப்பது போன்றும், ஒரு கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை ஏந்தியபடியும் இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்து கடவுளை அவமதிக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டருக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கனடா நாட்டின் டொராண்டோவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் பன்முக கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் "ரிதம்ஸ் ஆஃப் கனடா" என்ற திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின் ஒரு பகுதியாக 'காளி' ஆவணப்படம் திரையிடப்பட்டது.

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய 'காளி' ஆவணப்படத்தை திரும்ப பெற வேண்டும் என ஒட்டாவா இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆகா கான் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற 'அண்டர் தி டெண்ட்' நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக திரையிடப்பட்ட ஒரு ஆவணப்படத்தின் போஸ்டரில் இந்து கடவுளை அவமதித்ததாக கனடாவில் உள்ள இந்து மத தலைவர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன.

இதையடுத்து, டொராண்டோவில் உள்ள எங்கள் தூதரகம் இது குறித்து நிகழ்வின் அமைப்பாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பல இந்து அமைப்புகள் கனடா அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், கனடா அதிகாரிகள் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் சர்ச்சைக்குரிய அந்த திரைப்படம் சம்மந்தப்பட்ட அனைத்தையும் திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்