< Back
உலக செய்திகள்
கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்
உலக செய்திகள்

கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது - இலங்கை அமைச்சர் திட்டவட்டம்

தினத்தந்தி
|
4 April 2024 7:29 PM IST

கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கொழும்பு,

கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் பேசுபொருளாகி வருகிறது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரசும், தி.மு.க.வும்தான் காரணம் என்று பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க., 10 ஆண்டுகால ஆட்சியில் கச்சத்தீவை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன என பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசிடம் கேள்வி எழுப்பி வருகிறது. இதனிடையே கச்சத்தீவை மீட்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டோம் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த நிலையில், கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், இந்திய மீனவர்கள் இழுவைமடி படகுகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக மின்பிடிக்க வருகின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களின் கடற்தொழில், உபகரணங்களும், சேதப்படுத்தப்படுகின்றன.

இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்குவது சாத்தியமற்றது. கச்சத்தீவை திரும்ப வழங்க முடியாது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



மேலும் செய்திகள்