பிலிப்பைன்ஸ் நாட்டில் பஞ்சாப்பை சேர்ந்த கபடி பயிற்சியாளர் சுட்டு கொலை
|பிலிப்பைன்ஸ் நாட்டில் வீடு புகுந்து பஞ்சாப்பை சேர்ந்த கபடி பயிற்சியாளர் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.
மணிலா,
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு இந்தியாவின் பஞ்சாப்பில் மொகா மாவட்ட பகுதியை சேர்ந்தவரான குர்பிரீத் சிங் கிந்துரு (வயது 43) என்பவர் 4 ஆண்டுகளுக்கு முன் சென்றுள்ளார்.
கபடி பயிற்சியாளராக பணியில் இருந்த அவர் தலைநகர் மணிலாவில் வேலை முடிந்து வீடு திரும்பிய அவரை, மர்ம நபர்கள் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து உள்ளனர்.
அவருக்கு தலையில் பலத்த குண்டு காயம் ஏற்பட்டு உயிரிழந்து உள்ளார். இந்த படுகொலைக்கான சரியான காரணம் என்னவென தெரிய வரவில்லை.
இந்திய வம்சாவளியான பலர் சமீப நாட்களாக வெளிநாடுகளில் தாக்கப்படுவது அதிகரித்து காணப்படுகிறது.
இதன்படி, கனடாவின் ஒன்டாரியாவில் மொகித் சர்மா (வயது 28) என்பவர் அவரது காரின் பின்பகுதியில் மரணம் அடைந்து கிடந்துள்ளார். அவரும் பஞ்சாப்பை சேர்ந்தவர்.
இங்கிலாந்து நாட்டில், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி முடிவுக்கு பின்னர் இரு தரப்பு ரசிகர்கள் மோதி கொண்டனர். இதன்பின்பு அது வன்முறையாக வெடித்தது, பல்வேறு பொருட்கள் சூறையாடப்பட்டன.
இந்தியர்கள் மீது கனடாவிலும் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகம் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. வெறுப்புணர்விலான குற்றங்கள், வகுப்புவாத வன்முறை மற்றும் இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகள் கனடாவில் அதிகரித்து உள்ளன என சுட்டி காட்டப்பட்டு உள்ளது.
அமெரிக்காவிலும் இதே நிலையை மத்திய அரசு சுட்டி காட்டியுள்ளது. அந்நாட்டில் வசிக்கும் புலம்பெயர் இந்திய குடிமக்கள், அமெரிக்க நிரந்தர குடியுரிமை பெற்ற இந்தியர்கள் மீதும் கூட தாக்குதல் காணப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபரில் சுபம் கார்க் என்ற ஆக்ரா மாவட்டத்தின் கிராவ்லி பகுதியை சேர்ந்த 28 வயது இந்திய மாணவர் ஒருவர் பல முறை கத்தியால் குத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவமும் நடந்தது. இது ஒரு வெளிப்படையான இனவெறி தாக்குதல் ஆகும்.