< Back
உலக செய்திகள்
காசா மீதான போருக்கு எதிர்ப்பு: இஸ்ரேலுக்கான தூதரை உடனடியாக திரும்பப் பெறுவதாக ஜோர்டான் அறிவிப்பு

Image Courtacy: AFP

உலக செய்திகள்

காசா மீதான போருக்கு எதிர்ப்பு: இஸ்ரேலுக்கான தூதரை 'உடனடியாக' திரும்பப் பெறுவதாக ஜோர்டான் அறிவிப்பு

தினத்தந்தி
|
2 Nov 2023 2:57 AM IST

இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் மூர்க்கத்தனமான தாக்குதலில் காசா நகரம் சின்னாபின்னமாகி வருகிறது.

அம்மான்,

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த மாதம் 7-ந் தேதி போர் வெடித்தது. 4 வாரங்களாக நீடித்து வரும் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா.வும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் அதற்கு செவிசாய்க்க மறுக்கும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதாக சபதம் ஏற்று போரை நாளுக்கு நாள் தீவிரப்படுத்தி வருகிறது.

போர் தொடங்கிய நாளில் இருந்து காசாவை முற்றுகையிட்டு வான் மற்றும் கடல் வழியாக இடைவிடாமல் குண்டுகள் வீசப்பட்டு வரும் நிலையில், கடந்த 4 நாட்களாக வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து காசா நகரின் புறநகர் பகுதிகளை நோக்கி இஸ்ரேலிய தரைப்படை வேகமாக முன்னேறி வருகிறது.

இப்படி வான், கடல், தரை என 3 வழிகளிலும் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் மூர்க்கத்தனமான தாக்குதலில் காசா நகரம் சின்னாபின்னமாகி வருகிறது. இந்த போர் காசா இதுவரை சந்தித்திராத உயிரிழப்பு மற்றும் மோசமான மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.

காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொத்து, கொத்தாக கொன்று குவிக்கப்படும் சோகம் தொடர் கதையாய் நீள்கிறது.

இந்த நிலையில் காசாவில் உள்ள 8 அகதிகள் முகாம்களில் மிகப்பெரிய முகாமான ஜபாலியா முகாமில் இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் வான் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பல குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாகவும் காசா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை வெளியாகவில்லை.

இந்நிலையில் காசாவில் நடந்த போருக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலுக்கான தனது தூதரை "உடனடியாக" திரும்பப் பெறுவதாக ஜோர்டான் அறிவித்துள்ளது. மேலும் இஸ்ரேல் "முன்னோடியில்லாத மனிதாபிமான பேரழிவை" உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளது.

"காசாவில் அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலியப் போருக்கு" கண்டனத்தைப் பிரதிபலிக்கும் வகையில், "வெளியுறவு அமைச்சர் அய்மன் சபாடி இஸ்ரேலுக்கான ஜோர்டானின் தூதரை உடனடியாக திரும்பப் பெற முடிவு செய்தார்" என்று ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தில் இஸ்ரேல் தனது போரை நிறுத்தினால் மட்டுமே அதன் தூதர் திரும்புவார் என்று அமைச்சகம் கூறியது

மேலும் செய்திகள்