ஜி20 மாநாட்டில் ரஷியாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை - உலக நாடுகளின் தலைவர்கள் ஆதரவு
|ஜி20 கூட்டறிக்கையில் ‘இது போருக்கான காலம் அல்ல’ என்று பிரதமர் மோடி தெரிவித்த கருத்தும் இடம்பெற்றுள்ளது.
ஜகார்ட்டா,
இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி20 உச்சி மாநாடு நேற்று தொடங்கி 2 நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீனா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட ஜி-20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள ஆசிய, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பங்கேற்றனர்.
உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு கண்டனம் தெரிவிக்கும் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது,
இந்த கூட்டறிக்கைக்கு ஜி20 நாடுகளின் பெரும்பாலான தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். உக்ரைன் போரால் உலக அளவில் எரிசக்தி, உணவு மற்றும் ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை உலக தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இருப்பினும் ரஷியாவிற்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவிக்க இன்னும் சில நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன.
மேலும் இந்த அறிக்கையில் 'இது போருக்கான காலம் அல்ல' என்று பிரதமர் மோடி கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் தெரிவித்த கருத்தும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.