< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
அமெரிக்காவில் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனம் மீது மோதிய கார்
|19 Dec 2023 2:04 AM IST
விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் டெலாவேர் மாகாணம் வில்மிங்டனில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிவுற்ற பின்னர் தங்களது காரில் ஏறுவதற்காக ஜோ பைடன் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று அவரது பாதுகாப்பு வாகனம் மீது மோதியது.
இதில் அந்த வாகனங்கள் சேதம் அடைந்தன. எனினும் அதிர்ஷ்டவசமாக ஜோ பைடனுக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை. இதனையடுத்து ஜோ பைடன், ஜில் பைடன் ஆகிய இருவரும் தங்களது கார்களில் ஏறி புறப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனாதிபதியும், ஜில் பைடனும் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பாதுகாப்பாக வீடு சென்று சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.