< Back
உலக செய்திகள்
ஈரானில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க போராடும் பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது - அதிபர் ஜோ பைடன்
உலக செய்திகள்

ஈரானில் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க போராடும் பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது - அதிபர் ஜோ பைடன்

தினத்தந்தி
|
22 Sept 2022 7:31 AM IST

ஹிஜாப் சரியாக அணியவில்லை என போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானில் போராட்டம் வெடித்துள்ளது.

நியூயார்க்,

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் நேற்று பங்கேற்று பேசினர். அப்போது ஈரானிய பெண்களுடன் அமெரிக்கா ஒற்றுமையாக நிற்பதாக அவர் உறுதியளித்தார்.

ஈரானில் கடந்த 13-ம் தேதி குர்திஸ்தான் மாகாணம் சஹிஸ் நகரை சேர்ந்த 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் தனது குடும்பத்துடன் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றுள்ளார்.அதேவேளை, ஈரானில் உடை தொடர்பான நெறிமுறைகளை கடுமையாக அமல்படுத்தும் நெறிமுறை போலீஸ் பிரிவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தெஹ்ரான் செல்லும் வழியில் மாஷா அமினி மற்றும் அவர்களது குடும்பத்தினரை நெறிமுறை போலீசார் இடைமறித்துள்ளனர். அப்போது, மாஷா அமினி ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி அவரை நெறிமுறை போலீசார் கைது செய்து கடுமையாக தாக்கினர்.

போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த மாஷா போலீஸ் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாஷா அமினி கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், மாஷா மாரடைப்பு காரணமாக தான் உயிரிழந்ததாக ஈரான் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மாஷா அமினிக்கு ஆதரவாக ஈரானின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. பெருகிவரும் போராட்டங்களில் இதுவரை எட்டு பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய பைடன், ஈரான் போராட்டக்காரர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க உள்ளதாக கூறினார்.

அவர் பேசுகையில், ஈரானின் துணிச்சலான குடிமக்கள் இப்போது தங்கள் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க போராடுகிறார்கள். ஈரானின் துணிச்சலான பெண்களுடன் அமெரிக்கா துணை நிற்கிறது என்றார்.

நவம்பர் 2019க்குப் பிறகு ஈரானில் ஏற்பட்டுள்ள மிகவும் தீவிரமான போராட்டங்களில் இதுவும் ஒன்றாகும். அமினியின் சொந்த மாகாணமான குர்திஸ்தானில் வெள்ளிக்கிழமை முதல் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.

குறிப்பாக வடக்கு ஈரானில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக புதன்கிழமையும், பல நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசினர், போலீஸ் வாகனங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளுக்கு தீ வைத்தனர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இக்கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர், பலரை கைது செய்தனர்.மேலும் 8 போராட்டக்காரர்கள் கலவரத்தின் போது கொல்லப்பட்டனர். மேலும் 450 பேர் காயமடைந்தனர் மற்றும் 500 பேர் கைது செய்யப்பட்டனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்