கார் விபத்தில் உயிரிழந்த நபர் மாநாட்டில் பங்கேற்றாரா..? ஜோ பைடனின் ஞாபக மறதியால் அவையில் சிரிப்பலை!
|ஜாக்கி வாலோர்ஸ்கி சமீபத்தில் மரணமடைந்த விஷயத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மறந்துவிட்டார் எனத் தெரிகிறது.
வாஷிங்டன்,
அமெரிக்க நாடாளுமன்ற மூத்த பெண் உறுப்பினர் ஜாக்கி வாலோர்ஸ்கி கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு கார் விபத்தில் காலமானார். இந்தியானா குடியரசுக் கட்சியின் பிரதிநிதியான ஜாக்கி வாலோர்ஸ்கியின் மறைவுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இரங்கல் தெரிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்க வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த பசி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான ஒரு மாநாட்டில் அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார்.அப்போது ஜாக்கி வாலோர்ஸ்கி சமீபத்தில் மரணமடைந்த விஷயத்தை பைடன் மறந்துவிட்டார் எனத் தெரிகிறது.
அவர் ஜாக்கி வாலோர்ஸ்கியின் பெயரை உச்சரித்து அவரை அழைத்தார். "ஜாக்கி, நீங்கள் இங்கே இருக்கிறீர்களா? ஜாக்கி எங்கே? அவர் இங்கே இல்லை என்று தான் நினைக்கிறேன்" என்று பேசினார்.இதனையடுத்து அவர் பேசிய இந்த வீடியோ வைரலானது.
அதனை பார்த்த பலரும் அமெரிக்க ஜனாதிபதியின் ஞாபக மறதியை விமர்சித்து வருகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற பொதுநிகழ்ச்சிகளில் ஜோ பைடனின் பேச்சு பல்வேறு விதங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருவது வாடிக்கையாகிவிட்டது.