< Back
உலக செய்திகள்
ஜெலன்ஸ்கியை அதிபர் புதின் என அழைத்த ஜோ பைடன்

Image Courtesy : AFP

உலக செய்திகள்

ஜெலன்ஸ்கியை 'அதிபர் புதின்' என அழைத்த ஜோ பைடன்

தினத்தந்தி
|
12 July 2024 5:16 PM GMT

நேட்டோ மாநாட்டில் ஜெலன்ஸ்கியை ‘அதிபர் புதின்’ என்று ஜோ பைடன் அழைத்தது பேசுபொருளாகியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடைபெறுகிறது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்டு டிரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது டிரம்ப்பின் குற்றச்சாட்டுகளுக்கு பைடன் சரிவர பதில் அளிக்கவில்லை. மேலும் ஜோ பைடனின் மோசமான பதில்களால் அவரது சொந்த கட்சியினரே அதிருப்தி அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ஜோ பைடன் மீண்டும் தடுமாற்றத்தை சந்தித்துள்ளார். வாஷிங்டனில் 'நேட்டோ' உறுப்பு நாடுகளின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்பட 32 தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அறிமுகம் செய்து வைத்து பேச அழைத்தார். அப்போது வார்த்தை தடுமாறிய ஜோ படைன் ஜெலென்ஸ்கியை 'அதிபர் புதின்' என குறிப்பிட்டார். அடுத்த வினாடியே தனது தவறை உணர்ந்து கொண்ட அவர், 'புதினை ஜெலன்ஸ்கி தோற்கடிக்க போகிறார். புதினை தோற்கடிப்பதில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்' என்று கூறி சமாளித்தார்.

முன்னதாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் ஜோ பைடன் தடுமாற்றத்தை சந்தித்தார். அதில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் குறித்த கேட்கப்பட்ட கேள்விக்கு, 'துணை அதிபர் டிரம்ப்' என்று தவறுதலாக குறிப்பிட்ட ஜோ பைடன், பின்னர் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியதையடுத்து 'துணை அதிபர் கமலா ஹாரிஸ்' என்று திருத்திக் கொண்டார். அடுத்தடுத்து நடந்த 2 நிகழ்ச்சிகளிலும் ஜோ பைடன் தலைவர்களின் பெயர்களை மாற்றி உச்சரித்தது பேசுபொருளாகியுள்ளது.

மேலும் செய்திகள்