ராணி எலிசபெத் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்ட அமெரிக்க பேராசிரியர்... கண்டனம் தெரிவித்த ஜெஃப் பெசோஸ்
|அமெரிக்க பேராசியரான உஜு அனுயா, அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாஷிங்டன்,
இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், உடல்நலக்குறைவு காரணமாக தனது 96-வது வயதில் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவை தொடர்ந்து இங்கிலாந்தின் புதிய மன்னராக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். ராணி எலிசபெத் மறைவுக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும், அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அதே சமயம் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களையும் சமூக வலைதளங்களில் பலர் நினைவு கூர்ந்து வருகின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், தங்கள் முன்னோர்கள் காலனி ஆதிக்க காலத்தில் நிறவெறி காரணமாக அனுபவித்த துன்பங்களையும், அடிமைகளாக விற்கப்பட்டதையும் வேதனையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள கார்னெகி மெலோன் பல்கலைக்கழக பேராசியரான உஜு அனுயா, அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணி எலிசபெத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக செய்தி வெளியான நிலையில், உஜு அன்யா தனது டுவிட்டர் பக்கத்தில், "திருட்டு, கற்பழிப்பு, இனப்படுகொலை ஆகியவற்றை செய்யும் சாம்ராஜ்யத்தின் தலைமையாக இருப்பவர் இறுதியாக இறக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அவளது வலி அதிகமாகட்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், உலகின் 3-வது பெரும் பணக்காரரும், அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் இதற்கு பதிலடி கொடுத்திருந்தார். அதில், "உலகை மேம்படுத்தும் பணியில் இருப்பவரா இவர்? நான் அவ்வாறு நினைக்கவில்லை" என்று கூறி தனது கண்டனத்தை பதிவிட்டிருந்தார்.
அதே சமயம் டுவிட்டர் விதிகளை மீறியதாகக் கூறி பேராசியர் உஜு அன்யாவின் பதிவை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இதையடுத்து உஜு அன்யா மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "எனது குடும்பத்தில் பாதி பேர் படுகொலை செய்யப்பட்டு, இடம்பெயர்ந்து சென்று, அதன் வலிகளை தற்போது வரை நாங்கள் அனுபவிக்க காரணமாக இருந்த ஒரு இனப்படுகொலைக்கு நிதியுதவி செய்த அரசிக்கு நான் வெறுப்பைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்துவேன் என்று யாராவது எதிர்பார்த்தால், உங்கள் ஆசை நிறைவேறும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அதே சமயம் இது குறித்து கார்னெகி மெலோன் பல்கலைக்கழக தரப்பினர் கூறுகையில், பேராசிரியர் உஜு அன்யா வெளியிட்டது அவரது தனிப்பட்ட கருத்து என்றும், இது எந்த வகையில் பல்கலைக்கழகத்தின் விருப்பங்களைச் சார்ந்தது அல்ல என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.