8 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற ஜப்பான் ராக்கெட் தோல்வி
|உச்சினூரா விண்வெளி மையத்தில் இருந்து 8 செயற்கைக்கோள்களை சுமந்து சென்ற ஜப்பான் எப்சிலன்-6 ராக்கெட் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
ஜப்பானின் தெற்கு பகுதியில் ககோஷிமா மாகாணத்தில் உள்ள உச்சினூரா விண்வெளி மையத்திலிருந்து எப்சிலன்-6 ராக்கெட் மூலம் 8 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
ஆனால் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்ட 7 நிமிடங்களில் திட்டம் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
எப்சிலன்-6 ராக்கெட் பூமியைச் சுற்றி வர சரியான நிலையில் இல்லாத காரணத்தால் திட்டம் நிறுத்தப்பட்டதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்தது.
இதுபற்றி அதன் தலைவர் ஹிரோஷி யமகவா கூறுகையில், "ராக்கெட் தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படும். ராக்கெட் திட்டமிட்டபடி பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த சரியான நிலையில் இல்லை. பாதுகாப்பான ஏவுதல் செய்ய முடியாததை அடுத்து, ராக்கெட் தானாக அழியும் படி சிக்னல் கொடுக்கப்பட்டது. ராக்கெட் மற்றும் அதன் பாகங்கள் பிலிப்பைன்ஸின் கிழக்கே கடலில் விழுந்ததாக நம்பப்படுகிறது. தோல்விக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது." என்றார்.
ஜப்பானில் கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட முதல் ராக்கெட் தோல்வி இதுவாகும்.