ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா மீது குண்டுவீச்சு - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
|பொதுக்கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ,
தென்மேற்கு ஜப்பானில் உள்ள வயகமா என்ற பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் அந்நாட்டின் பிரதமர் புமியோ கிஷிடா இன்று காலை பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது ஒரு நபர் கையெறி குண்டு ஒன்றை வீசியுள்ளார். அதிக சத்தத்துடன் குண்டு வெடித்து புகை மூட்டம் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தில் பிரதமர் புமியோ கிஷிடா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். குண்டு வெடித்த சமயத்தில் பிரதமரின் பாதுகாவலர்கள் அவரை சூழ்ந்து கொண்டு பத்திரமாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர். குண்டு வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார். இந்நிலையில் தற்போது ஜப்பான் பிரதமர் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.