ஜப்பானில் வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறங்கிய விமானம்
|ஜப்பானில் வெடிகுண்டு மிரட்டலால் அவசரமாக தரையிறங்கிய விமானத்தில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே உள்ள நரிடாவில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து அந்த நாட்டின் கியூஷி தீவில் உள்ள புகுவோவாவுக்கு காலை விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்தது. உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விமானிக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து விமானம் அய்ச்சி மாகாணத்தில் உள்ள சென்ட்ரேர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் அங்கு தயார் நிலையில் இருந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். எனினும் விமானத்தில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பின்னரே வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது.