< Back
உலக செய்திகள்
மோசமான வானிலை.. நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான் திட்டம் ஒத்திவைப்பு
உலக செய்திகள்

மோசமான வானிலை.. நிலவுக்கு விண்கலம் அனுப்பும் ஜப்பான் திட்டம் ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
25 Aug 2023 1:14 PM IST

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து அடுத்து உலக நாடுகளின் பார்வை ஜப்பான் அனுப்பும் விண்கலத்தின் பக்கம் திரும்பி உள்ளது.

டோக்கியோ,

நிலவில் ஆய்வு செய்ய உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபத்தில் ரஷியா நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய லூனா 25 என்ற விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் ஆகஸ்ட் 21ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 19ம்தேதி விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியது. இதனால் அந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

அதேசமயம் இந்தியா கடந்த ஜூலை மாதம் விண்ணில் செலுத்திய சந்திரயான்-3 நேற்று முன்தினம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வுப் பணியை தொடங்கியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து அடுத்து உலக நாடுகளின் பார்வை ஜப்பான் அனுப்பும் விண்கலத்தின் பக்கம் திரும்பி உள்ளது.

ஜப்பான் நாடு விண்கலத்தை நிலவுக்கு அனுப்புவதற்கான பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டது. விண்கலத்தை வரும் 27ம்தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக விண்கலத்தை ஏவும் திட்டம் 28ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி 28ம் தேதி காலை 9.26 மணிக்கு விண்கலம் செலுத்தப்படும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (ஜாக்சா) அறிவித்துள்ளது. ராக்கெட் செலுத்தும் நிகழ்வை காலை 8.55 மணி முதல் நேரலையில் ஒளிபரப்ப உள்ளதாகவும் கூறி உள்ளது.

அதேசமயம் வானிலை நிலவரத்தின் அடிப்படையில் 28ம் தேதி விண்கலத்தை ஏவுவது சாத்தியமா இல்லையா? என்பதை மறுபரிசீலனை செய்வதாகவும் ஜாக்சா தெரிவித்துள்ளது.

லேண்டரை சுமந்து செல்லும் ராக்கெட் நான்கு முதல் ஆறு மாதங்களில் நிலவின் மேற்பரப்பை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானின் விண்வெளித் திட்டம் உலகின் மிகப்பெரிய விண்வெளித் திட்டமாகும். ஆனால் நவம்பர் 2022ல் நிலவில் தரையிறங்கும் அதன் முதல் முயற்சி தோல்வி அடைந்தது. அதேபோல் கடந்த மாதம் சோதனையின்போது ஒரு புதிய வகை ராக்கெட் வெடித்தது. எனினும் நவீன மேம்படுத்தப்பட்ட இந்த லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கும் என ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்