அமெரிக்க நாடாளுமன்றத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் தலைமை போலீஸ் அதிகாரி எச்சரிக்கை
|அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிப்பதற்காக நாடாளுமன்றம் கூடியது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிப்பதற்காக நாடாளுமன்றம் கூடியது.
அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் அமைந்துள்ள வாஷிங்டனில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கு அமலில் இருந்தது.
இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி நடந்தது போலவே மீண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தப்படுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக நாடாளுமன்ற தலைமை போலீஸ் அதிகாரி தாமஸ் மேங்கர் எச்சரித்துள்ளார். நினைத்து பார்க்க முடியாதது நடக்க வாய்ப்பு இருப்பதாகவும், எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் போலீசாரை அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக 2021-ல் நடந்த நாடாளுமன்ற கலவரம் குறித்து விசாரித்து வந்த நாடாளுமன்ற விசாரணை குழு சமீபத்தில் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்தது. அதில் கலவரத்துக்கு டிரம்ப் தான் காரணம் என்றும் அவர் மீது 4 கிரிமினல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும் எனவும் விசாரணை குழு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.