< Back
உலக செய்திகள்
ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பொருட்கள் ஏலம் - ரூ.86 கோடி திரட்டப்படும் என எதிர்பார்ப்பு
உலக செய்திகள்

ஜேம்ஸ் பாண்ட் படத்தின் பொருட்கள் ஏலம் - ரூ.86 கோடி திரட்டப்படும் என எதிர்பார்ப்பு

தினத்தந்தி
|
29 Sept 2022 7:07 PM IST

ஏலத்தின் மூலம் திரட்டப்படும் நிதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தைச் சேர்ந்த நாவலாசிரியர் இயான் பிளெம்மிங் என்பவரால் 1953 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது 'ஜேம்ஸ் பாண்ட்' என்ற கதாபாத்திரம். இங்கிலாந்தைச் சேர்ந்த ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்திற்கு '007' என்ற குறியீடு வழங்கப்பட்டது.

இந்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இயான் பிளெம்மிங் 12 நாவல்களையும், 2 சிறுகதை தொகுப்புகளையும் எழுதினார். இந்த கதாபாத்திரத்தை வைத்து முதல் முதலாக 1962 ஆம் ஆண்டு 'டாக்டர் நோ' என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது. சீன் கானரி முதல் ஜேம்ஸ் பாண்டாக நடித்திருந்தார்.

அன்று முதல் கடைசியாக கடந்த 2021-ல் வெளியான 'நோ டைம் டு டை' திரைப்படம் வரை, மொத்தம் 27 ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த வரிசை திரைப்படங்களுக்கென உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த நிலையில் திரைப்படங்கள் ஜேம்ஸ் பாண்ட் தோன்றி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, கடந்த ஆண்டு வெளியான 'நோ டைம் டு டை' திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆஸ்டன் மார்ட்டின் கார், ஜேம்ஸ் பாண்டின் உடை, கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் ஏலம் விடப்படுகின்றன.

லண்டனில் ஏலம் விடப்படும் இந்த பொருட்களின் மூலம் இந்திய மதிப்பில் சுமார் 86 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தின் மூலம் திரட்டப்படும் நிதி தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்