ஆன்லைன் வணிகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம்.. ஜாக் மா அளித்த வாக்குறுதியால் அலிபாபா நிறுவன பங்குகள் உயர்வு
|அலிபாபா நிறுவனம், இந்த ஆண்டு மூன்ஷூட் ஏ.ஐ., மினி மேக்ஸ் என இரண்டு ஏ.ஐ. ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளது.
சீனாவின் பிரபல ஆன்லைன் வணிக தளமான அலிபாபா நிறுவனத்தின் நிறுவனர் ஜாக் மா, அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.
அவரது கடிதத்தில், முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய இரண்டு அம்சங்கள் இருந்தன. அதாவது, நிறுவனத்தில் ஜாக் மாவின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு மீதான முதலீடு என இரண்டு குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜோ சாயின் கீழ் நிறுவனத்தை 6 மண்டலங்களாக பிரிப்பது உள்ளிட்ட சமீபத்திய மாற்றங்களுக்கும் ஜாக் மா ஒப்புதல் அளித்துள்ளார்.
"இப்போது செயற்கை நுண்ணறிவு (AI) சகாப்தம் வந்துவிட்டது. எல்லாம் இப்போதுதான் தொடங்கியிருக்கிறது. எனவே, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைன் வணிகத்தை மேம்படுத்துவோம்" என உறுதி அளித்துள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது 2021-ல் சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தபோது, அலிபாபா நிறுவனத்திற்கு பெரிய அளவில் அபராதம் விதிக்கப்பட்டது. உச்சத்தில் இருந்த அலிபாபாவின் பங்குகள், கடுமையாக சரியத் தொடங்கின. 330 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பை இழந்ததாக தென் சீனா மார்னிங் போஸ்ட் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர், நிறுவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதற்காக பெரிய அளவில் நிர்வாக மாற்றங்கள் செய்யப்பட்டன.
நெருக்கடியான சூழ்நிலை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக பெரிய அளவில் கவனம் பெறாமல் இருந்தார் ஜாக் மா. நிறுவன வளர்ச்சி தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஊழியர்களுக்கு கடிதம் எழுதினார். அதன்பின்னர் நிறுவனத்தின் மறுசீரமைப்புக்காக நேற்று மீண்டும் கடிதம் எழுதியிருக்கிறார்.
அலிபாபா நிறுவனம், இந்த ஆண்டு மூன்ஷூட் ஏ.ஐ., மினி மேக்ஸ் என இரண்டு ஏ.ஐ. ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளது. மூன்ஷூட் ஸ்டார்ட்அப்பில் 2.5 பில்லியன் டாலரும், மினி மேக்சில் ஒரு பில்லியன் டாலரும் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாட்ஜிபிடி போன்ற கருவிகளுக்கு பின்னால் உள்ள தொழில்நுட்பமான ஜெனரேட்டிவ் ஏஐ-யில் இந்த இரண்டு ஸ்டார்ட்அப்களும் ஒன்றோடு ஒன்று போட்டியிடுகின்றன.
ஜாக் மா எழுதிய கடிதம் பெருமளவில் உத்வேகம் அளித்ததையடுத்து, ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் அலிபாபா பங்குகளின் மதிப்பு 5 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.