< Back
உலக செய்திகள்
அலிபாபா தலைவர் ஜாக் மா தனக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு..?
உலக செய்திகள்

அலிபாபா தலைவர் ஜாக் மா தனக்கு சொந்தமான நிறுவனத்தின் பங்குகளை விற்க முடிவு..?

தினத்தந்தி
|
29 July 2022 4:12 PM IST

அவருக்கு சொந்தமான ஆண்ட் நிறுவன பங்குகளை விற்க முடிவு செய்து இருப்பதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பீஜிங்,

சீனாவை சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் தலைவர் ஜாக் மா. சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாகத் தனதாக்கிக் கொண்டதன் மூலம் அலிபாபா ௪௨௦ பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்தது.

ஜாக் மாவும் இதன் மூலம் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். தற்போது அலிபாபா தனது சேவையை உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தியுள்ளது. இந்த நிலையில் சமீபகாலமாக ஜாக் மாவுக்கும், சீன அரசுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. தனது நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் சீன அரசின் செயல் பழமைவாதம் என்று ஜாக் மா விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜாக் மாவுக்கு சீன அரசு பல இடையூறுகளை அளித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஜாக் மாவைக் காணவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் பொது வெளியில் தலை காட்டாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக மறைந்தே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் ஐரோப்பாவில் இருக்கும் செய்திகள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில், அவருக்கு சொந்தமான ஆண்ட் நிறுவன பங்குகளை விற்க முடிவு செய்து இருப்பதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவருக்கு சொந்தமான ஆண்ட் நிறுவனம் சீனாவின் மிகப்பெரிய மொபைல் வழி ஆன்லைன் பரிவர்த்தனை செயலியான அலிபேவை செயல்படுத்தி வருகிறது. இந்த செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

ஆண்ட் நிறுவன பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்ட உள்ளதாக தெரிகிறது.ஆண்ட் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளின் உரிமையை மா வைத்துள்ளார்.

எனினும் இந்த தகவலை அண்ட், அலிபாபா மற்றும் மா பவுண்டேசன் நிர்வாகிகள் எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருகின்றனர். அதேபோல சீனாவின் மத்திய வங்கியும் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

மேலும் செய்திகள்