இத்தாலி: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான 7 பேரின் உடல்கள் மீட்பு
|இத்தாலியில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி உள்ளிட்ட 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
ரோம்,
இத்தாலி நாட்டில் டஸ்கேனி நகரில் உள்ள லுக்கா என்ற பகுதியில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது. டிரெவிசோ என்ற வடக்கு நகரை நோக்கிய அதன் பயணத்தின்போது, உள்ளடங்கிய தொலைதூர பகுதிக்கு ஹெலிகாப்டர் சென்று விட்டது.
இதில், வானிலை மோசமடைந்த சூழலில் ஹெலிகாப்டர் ரேடாரின் சிக்னலில் இருந்து விடுபட்டு உள்ளது. 2 நாட்களாக அதனை காணாமல் தேடும் பணி தொடங்கியது.
இந்நிலையில், டஸ்கேனி மற்றும் எமிலியா ரொமேக்னா பகுதிக்கு இடையேயான எல்லை பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கிடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதில் பயணித்த 7 பயணிகளும் உயிரிழந்து உள்ளனர். அவர்களில், துருக்கி நாட்டை சேர்ந்த 4 பேர் மற்றும் லெபனானை சேர்ந்த 2 பேர் உள்ளிட்டோரும் அடங்குவர். இவர்கள் வர்த்தக சுற்றுலாவுக்காக இத்தாலிக்கு வந்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இத்தாலி நாட்டை சேர்ந்த விமானியும் உயிரிழந்து உள்ளார்.