இத்தாலி: கண்காட்சியில் 49 தங்க சிலைகள் கொள்ளை
|இத்தாலி கண்காட்சியில் கொள்ளை போன 49 தங்க சிலைகளின் மொத்த மதிப்பு ரூ.10.76 கோடி என கூறப்படுகிறது.
ரோம்,
இத்தாலி நாட்டில் லேக் கர்டா பகுதியருகே கலை பொருட்களின் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்ட இந்த கண்காட்சியில் தங்கத்தில் செய்யப்பட்ட எண்ணற்ற சிலைகள், மோதிரங்கள், பிரேஸ்லெட்டுகள் மற்றும் பிற தங்க நகைகள் உள்ளிட்டவை காட்சி பொருளாக வைக்கப்பட்டு இருந்தன.
கடந்த வெள்ளி கிழமையுடன் இந்த கண்காட்சியை நிறைவு செய்வது என திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த சூழலில், கண்காட்சியில் இருந்து 49 தங்க சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் இத்தாலிய நாட்டு சிற்பியான அம்பர்தோ மேஸ்திரோயியான்னி என்பவரால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.10.76 கோடி என கூறப்படுகிறது. இதுபற்றி விசாரணை செய்தபோது, சிலைகளில் ஒன்று கண்காட்சி நடைபெறும் வளாகத்தின் மைதானத்தில் கிடந்தது தெரிய வந்தது. ஆண் அல்லது பெண் என பெயரிடப்பட்ட இந்த சிலையை தவிர, மற்ற 48 சிலைகள் காணாமல் போய் விட்டன என கண்காட்சியை நடத்தும் இத்தாலிய எஸ்டேட் அமைப்பு தெரிவித்து உள்ளது.
கொள்ளை சம்பவம் பற்றி எஸ்டேட் தலைவர் கியார்டானோ புரூனோ குவெர்ரி கூறும்போது, திறமையான கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்க கூடும் என கூறியுள்ளார். அந்த கொள்ளை கும்பல் முதலில், எச்சரிக்கை மணியை செயலிழக்க செய்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டு உள்ளது.
அவர்கள் சிலையை தூக்கி செல்லும்போது, அவற்றில் ஒன்று தவறி விழுந்திருக்க கூடும் என தெரிகிறது. அதுவே மீட்கப்பட்டு உள்ளது. எனினும், அந்த கும்பல் யாரென தெரிய வரவில்லை. நேற்று வரை இந்த சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.