2024-க்குள் சிங்கப்பூர் சுற்றுலா துறை கொரோனாவுக்கு முந்தின வளர்ச்சி நிலையை அடையும் என தகவல்
|வருகிற 2024-ம் ஆண்டுக்குள் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முந்தின வளர்ச்சி நிலையை சிங்கப்பூர் சுற்றுலா துறை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர்,
கொரோனா பெருந்தொற்று பரவலால் உலக நாடுகள் முழுவதும் மக்கள் 3 ஆண்டுகளாக தீவிர பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். ரெயில், விமானம், வாகன போக்குவரத்து முடங்கிய சூழலில் சுற்றுலா துறையின் வளர்ச்சியும் பெருமளவில் தேக்கம் அடைந்தது. இவற்றில் இருந்து நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வர முயன்று கொண்டிருக்கின்றன.
இவற்றில் சிங்கப்பூரும் ஒன்று. எனினும், கடந்த 2022-ம் ஆண்டில் அந்நாடு சுற்றுலா துறையில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இதன்படி, கடந்த ஆண்டில் 40 லட்சம் முதல் 60 லட்சம் வரை சுற்றுலாவாசிகளின் வருகை இருக்கும் என அந்நாட்டு சுற்றுலா வாரியம் கணிப்பு வெளியிட்டு இருந்தது.
ஆனால், அதனை பொய்யாக்கும் வகையில், சுற்றுலாவாசிகள் வருகை அதிகரித்து இருந்தது. இதுபற்றி கடந்த வாரம் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலில், மொத்தம் 63 லட்சம் பேர் சிங்கப்பூருக்கு கடந்த ஆண்டில் வருகை தந்துள்ளனர் என தெரிவிக்கின்றது.
இவற்றில் முதல் இடத்தில் 11 லட்சம் பேர் என்ற எண்ணிக்கையுடன் இந்தோனேசியா முதல் இடத்திலும், 6.86 லட்சம் பேர் என்ற எண்ணிக்கையுடன் இந்தியா 2-வது இடத்திலும், 5.91 லட்சம் என்ற எண்ணிக்கையுடன் மலேசியா 3-வது இடத்திலும் உள்ளன.
இதனால், பொழுதுபோக்கு, கேமிங் மற்றும் சுற்றுலா தலங்கள் என பார்வையாளர்களுக்கான பல்வேறு வகை வசதிகளை கொண்ட சிங்கப்பூரில், சுற்றுலா துறையானது வருகிற 2024-ம் ஆண்டுக்குள் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு முந்தின வளர்ச்சி நிலையை அடைய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.