
Photo Credit: AFP
காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர்.
காசா,
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் பணய கைதிகளாக 240 பேரை கடத்திச் சென்றனர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 7 மாதங்களை தாண்டியும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போரில் காசா தரப்பில் இதுவரை சுமார் 35 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எனவே போரை நிறுத்த கோரி ஐ.நா. மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன.அதேபோல் வெளிநாடுகளில் உள்ள பாலஸ்தீன ஆதரவாளர்கள் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே போரை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அதனை நிராகரித்தார்.
இந்த சூழ்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகினர். இதனையடுத்து தனது படைகளை காசாவுக்குள் அனுப்பி தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியது. முன்னதாக ரபா நகரில் வசிக்கும் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
அதன்படி ரபா நகரில் இஸ்ரேல் ராணுவம் சரமாரி வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் காணும் இடமெங்கும் போர்க்களம் போல காட்சியளிக்கிறது. எனவே அங்கு வசிக்கும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர்.