"ஈரான் பெரிய தவறை செய்துவிட்டது.. அதற்கான விலை கொடுத்தே ஆக வேண்டும்.." - இஸ்ரேல் பிரதமர் சூளுரை
|இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம்,
பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும், ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இந்த 2 அமைப்புகளும் ஈரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளாகும். இது தவிர சிரியாவின் எல்லையோர பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய ஈரான் ஆதரவு ஆயுத குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. எனவே இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
இந்த சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரானில் இருந்த ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் படுகொலை செய்தது. தங்கள் மண்ணில் நிகழ்த்தப்பட்ட இந்த கொலைக்கு இஸ்ரேலை பழிதீர்ப்போம் என ஈரான் சூளுரைத்தது. எனினும் இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் எதையும் நடத்தவில்லை.
இதனிடையே கடந்த வாரம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இந்த தாக்குதலில் நஸ்ரல்லாவுடன் இருந்த ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் என்பவரும் கொல்லப்பட்டார். இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது.
இந்த நிலையில் நேற்று இரவு இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. ஒரே சமயத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் உருவானது. டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வான்தாக்குதல் குறித்து எச்சரிக்கும் சைரன் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.
மேலும் மக்கள் அனைவரும் அருகில் உள்ள பதுங்கு குழிகளில் சென்று பாதுகாப்பாக இருக்கும்படி செல்போன் மூலமும், தொலைக்காட்சி வாயிலாகவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஈரானின் ஏவுகணை தாக்குதலில் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசிய அவர், "ஈரான் இன்றிரவு பெரிய தவறைச் செய்துவிட்டது.. அதற்கான விலை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியடைந்துள்ளது. நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நமது உறுதியையும், எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதற்கான நமது உறுதியையும் ஈரானின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை" என்று பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
முன்னதாக எங்களுடன் மோத வேண்டாம் என்று இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இது தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ஈரான் மக்களின் நலனை பாதுகாக்க இந்த நடவடிக்கை (இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்) எடுக்கப்பட்டது. ஈரான் போரை விரும்பவில்லை என நெதன்யாகு (இஸ்ரேல் பிரதமர்) புரிந்துகொள்ள வேண்டும். எங்களுடன் மோத வேண்டாம். ஆனால், எந்த அச்சுறுத்தல் வந்தாலும் ஈரான் வலிமையாக எதிர்கொள்ளும்" என்று பதிவிட்டிருந்தார்.