< Back
உலக செய்திகள்
அவர்கள் சொன்னது எல்லாமே பொய்.. மறுப்பு தெரிவிக்கவே வந்தேன்: ஐ.நா. சபையில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு
உலக செய்திகள்

அவர்கள் சொன்னது எல்லாமே பொய்.. மறுப்பு தெரிவிக்கவே வந்தேன்: ஐ.நா. சபையில் இஸ்ரேல் பிரதமர் பேச்சு

தினத்தந்தி
|
27 Sept 2024 9:55 PM IST

பிராந்தியத்தில் பல பிரச்சினைகளுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம்சாட்டினார்.

நியூயார்க்:

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஓராண்டை நெருங்கி உள்ளது. ஹமாஸ் அமைப்பின் அக்டோபர்-7 தாக்குதலுக்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 41,500 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 96,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஐ.நா. சபையின் 79-வது அமர்வில் இஸ்ரேல்-ஹமாஸ் போர், பிராந்திய பதற்றங்கள் குறித்து பல்வேறு தலைவர்கள் பேசி வருகின்றனர். குறிப்பாக, போரை நிறுத்த வேண்டும் என இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். முழு அளவிலான போர் வெடிக்கலாம் என்பதால், காசாவில் உடனடியாக 21 நாள் போர்நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிற கூட்டணி நாடுகள் நேற்று முன்தினம் கூட்டாக அறிக்கை வெளியிட்டன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்றைய கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்த வருடம் இங்கு வரவேண்டும் என நான் நினைக்கவில்லை. என் நாடு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த கூட்டத்தில் பல தலைவர்கள் என் நாட்டின் மீது சுமத்தப்பட்ட பொய்களையும் அவதூறுகளையும் கேட்டபிறகு, நான் இங்கு வந்து சரி செய்ய முடிவு செய்தேன். தலைவர்கள் கூறிய பொய்களை மறுக்கவே இங்கு வந்தேன்.

இஸ்ரேல் அமைதியை விரும்புகிறது. ஆனால் ஈரானைப் பொருத்தவரை, எங்களை தாக்கினால், நாங்களும் தாக்குவோம். பிராந்தியத்தில் பல பிரச்சினைகளுக்கு பின்னால் ஈரான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நெதன்யாகு பேசுவதற்கு முன்னதாக பேசிய இரு தலைவர்கள் இஸ்ரேல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தினர்.

"மிஸ்டர் நெதன்யாகு, இந்த போரை நிறுத்துங்கள்" என்று ஸ்லோவேனிய பிரதமர் ராபர்ட் கோலோப் தனது தனது பேச்சை முடித்துக்கொண்டு மேஜையில் ஓங்கி தட்டினார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பேசும்போது, "காசாவில் நடப்பது வெறும் மோதல் மட்டும் அல்ல. இது பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களை திட்டமிட்டு படுகொலை செய்யும் நடவடிக்கை'' என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

மேலும் செய்திகள்