ஈரான் மீது சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் இஸ்ரேல் நகரங்கள் அழிக்கப்படும்; அதிபர் ரெய்சி எச்சரிக்கை
|ஈரானின் ராணுவ தின நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ரெய்சி நாட்டின் மீது எந்தவொரு சிறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் அழிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தெஹ்ரான்,
ஈரான் நாட்டில் வருடாந்திர ராணுவ தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி தலைநகர் தெஹ்ரானில் நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் இப்ராகிம் ரெய்சி கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நகரின் உயரே பறந்து தங்களது படை பலம் என்னவென பறைசாற்றின. இதேபோன்று, ஈரானின் நீர்மூழ்கி கப்பல்களும் கடலில் பயணித்தன.
இதனை முன்னிட்டு அதிபர் ரெய்சி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் பேசும்போது, ஈரானின் அணு ஆயுத மற்றும் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்த கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
எதிரிகள் அதிலும் குறிப்பிடும்படியாக, இஸ்ரேல் அரசுக்கு தெரிவிக்கப்படும் செய்தி என்னவென்றால், எங்களது நாட்டுக்கு எதிராக எந்தவொரு சிறு நடவடிக்கையும் எடுக்கப்பட்டால், அதற்கு எங்களுடைய ஆயுத படைகளிடம் இருந்து கடுமையானதொரு பதிலடி கிடைக்க பெறும்.
இதன்பின் ஹைபா மற்றும் டெல் அவிவ் ஆகிய நகரங்கள் தரைமட்டம் ஆக்கப்படும் என்று கூறியுள்ளார். இஸ்ரேலின் முக்கிய வர்த்தக நகரங்களில் ஒன்றாக டெல் அவிவ் இருந்து வருகிறது.
இஸ்ரேல் அதிபர் நேதன்யாகு சமீபத்தில் தேசிய அளவிலான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது, இன்றைய ஈரானை நாஜி காலத்தில் இருந்த ஜெர்மனியுடன் ஒப்பிட்டு பேசினார். யூத மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
ஈரானின், ராணுவ படைகள் மத்திய கிழக்கு பகுதி வரை விரிந்து பரவியுள்ளன. லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுக்களுக்கு ஈரானின் ஆதரவும் காணப்படுகிறது. ஈரானின் படைகள் அமெரிக்க கடற்படையுடன் அவ்வப்போது மோதல்களில் ஈடுபடும் சூழலும் பதற்ற நிலையை உண்டு பண்ணுகிறது.
இதனை தொடர்ந்தே ஈரான் அதிபர் எச்சரிக்கை விடும் வகையில் பேசியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் ரெய்சி, மத்திய கிழக்கு பகுதியில் இருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.