< Back
உலக செய்திகள்
இஸ்ரேல் ராணுவம் காசா நகரின் மையப்பகுதியில் உள்ளது - பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்

Image Courtacy: AFP 

உலக செய்திகள்

இஸ்ரேல் ராணுவம் காசா நகரின் மையப்பகுதியில் உள்ளது - பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்

தினத்தந்தி
|
8 Nov 2023 3:57 AM IST

இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தத்தை கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வருகிறது.

காசா,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்தை கடந்துவிட்டது. இந்த போரில் காசாவில் மட்டும் இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4,100 பேர் சிறுவர்கள், 2,640 பேர் பெண்கள் ஆவர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த மாதம் 7-ந்தேதி நடத்திய தாக்குதலில் 1,400 பேர் பலியானதும், வெளிநாட்டினர் உள்பட சுமார் 250 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணை கைதிகளாக பிடித்து காசா பகுதிக்கு கொண்டு சென்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே இதற்கு முன்னரும் 4 முறை போர் ஏற்பட்டிருந்தாலும், இஸ்ரேல் உருவான 75 ஆண்டுகளில், இத்தனை குறுகிய காலத்தில் மிக அபாயகரமான போராக மாறியுள்ளது இதுதான்.

போரை நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. மற்றும் பல உலக நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தாலும், ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிப்பதே நோக்கம் என்று கூறி இஸ்ரேல் போரை தொடர்ந்து வருகிறது.

இதற்கிடையில் இஸ்ரேலின் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தத்தை கொண்டு வர தீவிரமாக முயற்சித்து வருகிறது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமர் நேட்டன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். எனினும் இந்த பேச்சுவார்த்தையில் போர் இடைநிறுத்தம் தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசா நகரின் மையப்பகுதியில் உள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலன்ட் தெரிவித்துள்ளார். தொடரும் போரானது, இரண்டாவது மாதத்தில் நுழைந்துள்ளநிலையில், போர் நிறுத்தம் அல்லது போர் "இடைநிறுத்தம்" செய்வது போன்ற சர்வதேச அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும், "பணயக்கைதிகள் திரும்பாமல் மனிதாபிமான போர் நிறுத்தம் இருக்காது" என்று அமைச்சர் கேலண்ட் கூறினார்.

முன்னதாக இஸ்ரேலின் தாக்குதலால் 10,300க்கும் அதிகமான பொதுமக்கள், பெரும்பாலும் குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்