< Back
உலக செய்திகள்
துப்பாக்கிச்சூடு கொள்கை குறித்து யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது - இஸ்ரேல் பிரதமர்
உலக செய்திகள்

துப்பாக்கிச்சூடு கொள்கை குறித்து யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது - இஸ்ரேல் பிரதமர்

தினத்தந்தி
|
7 Sep 2022 10:15 PM GMT

துப்பாக்கிச்சூடு கொள்கை குறித்து யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கடந்த மே 11-ம் தேதி மேற்குகரை பகுதியில் உள்ள ஜெனின் நகரில் உள்ள முகாமில் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு இஸ்ரேலிய படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இது தொடர்பான செய்தியை சேகரிக்க அப்பகுதிக்கு கத்தாரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செய்தி நிறுவனத்தின் பெண் செய்தியாளர் ஷெரீன் அபு அக்லே சென்றிருந்தார்.

அப்போது, அங்கு இஸ்ரேல் படையினருக்கு பாலஸ்தீன பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச்சூட்டின்போது செய்தி சேகரிக்க சென்ற ஷெரீன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஷெரீன் அபு மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார்? என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வந்தது.

இதனிடையே, அல்ஜசீரா பெண் பத்திரிக்கையாளர் ஷெரீன் தங்கள் நாட்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்திருக்கலாம் என்பதற்கான சாத்திகூறுகள் அதிக அளவில் உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கடந்த 5-ம் தேதி தெரிவித்தது.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் தங்கள் துப்பாக்கிச்சூடு கொள்கைகள் குறித்து மறுசீராய்வு செய்ய அழுத்தம் கொடுப்போம் என்று அமெரிக்கா தெரிவித்தது.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு கொள்கை குறித்து யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும், அல்ஜசீரா பத்திரிக்கையாளர் ஷெரீன் அபு அக்லே உயிரிழப்பிற்கும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து வேண்டுகோள்கள் வருவதால் மட்டும் பயங்கரவாதிகளில் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ளும் இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் மீது வழக்குத்தொடர நான் அனுமதிக்கமாட்டேன்.

உயிருக்காக நாங்கள் போராடும்போது எங்கள் திறந்த நிலை துப்பாக்கிச்சூடு கொள்கை குறித்து யாரும் எங்களுக்கு ஆணையிட முடியாது. எங்கள் படை வீரர்களுக்கு இஸ்ரேல் அரசு, இஸ்ரேல் மக்களின் முழு ஆதரவு உள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்