ஹமாசின் டிரோன் தாக்குதல் முறியடிப்பு - இஸ்ரேல் ராணுவம் தகவல்
|ஹமாசால் ஏவப்பட்ட டிரோன் தாக்குதலை முறியடித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம்,
Live Updates
- 23 Oct 2023 7:47 PM IST
ஹமாசின் டிரோன் தாக்குதல் முறியடிப்பு - இஸ்ரேல் ராணுவம்
காசா எல்லையோரம் அமைந்துள்ள இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஹமாஸ் டிரோன் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்பிரிவான அல்-குவாசம் பிரிகேடிஸ் இந்த டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்நிலையில், ஹமாஸ் ஆயுதக்குழுவால் ஏவப்பட்ட டிரோன் தாக்குதலை முறியடித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவில் இருந்து ஏவப்பட 2 டிரோன்களும் நிர் ஒஸ் மற்றும் என் ஹபிசர் பகுதியில் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- 23 Oct 2023 7:11 PM IST
இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஹமாஸ் டிரோன் தாக்குதல்
காசா எல்லையோரம் அமைந்துள்ள இஸ்ரேல் ராணுவ நிலைகள் மீது ஹமாஸ் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்பிரிவான அல்-குவாசம் பிரிகேடிஸ் இந்த டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
இஸ்ரேலின் ஹட்சிரம் நகரில் உள்ள விமானப்படைத்தளம் மற்றும், தஸ்லிம் நகரில் உள்ள ராணுவப்படைத்தளத்தை குறிவைத்து ஹமாஸ் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.
- 23 Oct 2023 5:21 PM IST
பிணைக்கைதிகள்:-
இஸ்ரேலுக்குள் புகுந்து கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலின் போது பலரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசாவுக்குள் கொண்டு சென்றனர். பிணைக்கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் வசம் 222 பேர் பிணைக்கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
- 23 Oct 2023 4:49 PM IST
பலி எண்ணிக்கை:
இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இதுவரை 1,405 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 5 ஆயிரத்து 87 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 95 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.
- 23 Oct 2023 4:30 PM IST
17வது நாளாக தொடரும் போர்:
இஸ்ரேல் மீது கடந்த 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் போர் இன்று 17வது நாளாக நீடித்து வருகிறது.
- 23 Oct 2023 1:53 PM IST
இஸ்ரேல் படைகள், லெபனானில் ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பு மீது கடுமையான தாக்குதல்
லெபனான் நாட்டில், ராணுவ வளாகம் மற்றும் கண்காணிப்பு நிலை உள்பட ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பு மீது இஸ்ரேல் படைகள் கடுமையான தாக்குதலை நடத்தின.
இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சார்பிலான எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட பதிவில், வடக்கு இஸ்ரேல் பகுதியில் நள்ளிரவில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இதில் எங்களுடைய படைகள், லெபனான் நாட்டில் இருந்த ராணுவ வளாகம் மற்றும் கண்காணிப்பு நிலை உள்பட ஹிஜ்புல்லா பயங்கரவாத உட்கட்டமைப்பு மீது இஸ்ரேல் படைகள் கடுமையான தாக்குதலை நடத்தின.
லெபனான் எல்லையையொட்டிய பகுதியில் அமைந்த 4 ஹிஜ்புல்லா பயங்கரவாத முகாம்களின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு அவை தகர்க்கப்பட்டன என்று தெரிவித்து உள்ளது.
- 23 Oct 2023 1:46 PM IST
காசாவில் 320 இடங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி உள்ளது. ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன ஜிகாத் அமைப்புகளின் கட்டமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன்படி, பயிற்சி மையங்கள், சுரங்க பாதைகள், தலைமை இடங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இதேபோன்று காசா எல்லையில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர் உயிரிழந்து உள்ளார்.
- 23 Oct 2023 12:06 PM IST
இஸ்ரேல் பாதுகாப்பு படையின் (ஐ.டி.எப்.) யஹலோம் பிரிவு, கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மீதமுள்ள வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
வெடிக்காத வெடிகுண்டுகள் மீதம் உள்ளனவா என்றும் அவற்றை தூய்மைப்படுத்தும் மற்றும் அப்புறப்படுத்தும் பணியும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிறது.
இதில், உயிரிழந்த சில உடல்களில் வெடிகுண்டுகள் இணைக்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபற்றிய சில புகைப்படங்களை ஐ.டி.எப். வெளியிட்டிருக்கிறது.
- 23 Oct 2023 11:13 AM IST
இஸ்ரேலுக்கு எதிராக கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இதுவரை 2 லட்சம் இஸ்ரேல் நாட்டினர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
13 குடும்பங்களை சேர்ந்த 21 குழந்தைகள் பெற்றோர் இன்றி கைவிடப்பட்டு உள்ளனர் என இஸ்ரேலின் நலன்களுக்கான அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இவர்களில் 16 பேரின் பெற்றோர்களில் இருவரும் கொல்லப்பட்டு உள்ளனர். மற்ற குழந்தைகளின் பெற்றோரில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்றொருவர் பணய கைதியாக சிறை பிடிக்கப்பட்டோ அல்லது காணாமலோ போயுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
- 23 Oct 2023 10:58 AM IST
பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.வின் நிவாரண மற்றும் பணிகளுக்கான கழகம் கூறும்போது, காசாவில் இருந்த எங்களுடைய பணியாளர்கள் 29 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 50 சதவீதத்தினர் ஆசிரியர்கள் என்றும் தெரிவித்து உள்ளது.
இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறோம். எங்கள் வேதனைகளை ஒருவருக்கொருவர் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்கிறோம் என அதுபற்றி ஐ.நா. அமைப்பு எக்ஸ் சமூக ஊடக பதிவில் தெரிவித்து உள்ளது.