< Back
உலக செய்திகள்
லெபனானில் அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்
உலக செய்திகள்

லெபனானில் அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

தினத்தந்தி
|
2 Oct 2024 2:32 PM IST

மக்கள் தங்களின் பாதுகாப்பிற்காக, உடனடியாக வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும் என இஸ்ரேல் கூறி உள்ளது.

ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான், நேற்று இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுத்தால் தாக்குதல் இன்னும் தீவிரமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிரான புதிய தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது. தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேறும்படி, இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

"ஹிஸ்புல்லாவின் செயற்பாடு இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலை தூண்டுகிறது. இஸ்ரேல் ராணுவம் உங்களுக்கு (மக்கள்) பாதிப்பு ஏற்படுத்த விரும்பவில்லை. உங்களின் பாதுகாப்பிற்காக, நீங்கள் உடனடியாக வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும். ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு அருகில் இருக்கும் மக்களுக்கு ஆபத்து உள்ளது" என்று இஸ்ரேல் ராணுவ அதிகாரி கர்னல் அவிச்சாய் அட்ரே, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

எனவே, விரைவில் லெபனான் மீது வான் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போர் பதற்றம் அதிகரித்திருப்பதால், ஒருசில நாடுகள் லெபனானில் உள்ள தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றத் தொடங்கி உள்ளன.

மேலும் செய்திகள்