காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 18 ஹமாஸ் பயங்கரவாதிகள் பலி
|இஸ்ரேலின் ஜெட் விமானங்கள், ஹிஜ்புல்லா கண்காணிப்பு நிலைகள் மீதும் தெற்கு லெபனான் பகுதியிலும் தாக்குதல்களை நடத்தின.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. 240 பணய கைதிகளில் 134 பேர் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர். எனினும், அவர்களில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று தகவல் தெரிவிக்கின்றது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் காசா மற்றும் அதற்கடுத்து, 2-வது பெரிய நகரான கான் யூனிஸ் பகுதிகள் மீது இன்று காலை தாக்குதல் தொடுத்தன. இஸ்ரேலின் ஜெட் விமானங்கள், ஹிஜ்புல்லா கண்காணிப்பு நிலைகள் மீதும் தெற்கு லெபனான் பகுதியிலும் தாக்குதல்களை நடத்தின.
இதில், துப்பாக்கி, பீரங்கி குண்டுகள் மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டன என படைகள் இன்று காலை தெரிவித்தது. இதில் ஒரு தாக்குதலில், படைகளுக்கு அடுத்து செயல்பட்டு கொண்டிருந்த பயங்கரவாதிகளை அடையாளம் கண்ட வீரர்கள், அவர்களை இலக்காக கொண்டு வான்வழி தாக்குதல் ஒன்றை நடத்தினர்.
இதில், பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில், ஹமாஸ் வளாகத்திற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் 3 பேரை இஸ்ரேல் தரை படைகள் அடையாளம் கண்டதும், இஸ்ரேலின் விமானம் தாக்குதல் நடத்தி அவர்களை அழித்தது. ஒரு சில நிமிடங்களில், மற்றொரு ஹமாஸ் வளாகத்தில் இருந்து வெளியே வந்த பயங்கரவாதியும் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார்.
கான் யூனிஸ் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மொத்தத்தில், காசா முனை பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, லெபனான் நாட்டில் இருந்து கஜார் மற்றும் ஹர்தோவ் பகுதிகளை நோக்கி பல்வேறு முறை தாக்குதல்கள் நடந்தன. இதற்கு இஸ்ரேல் படைகள் பதிலடி கொடுத்தன. எனினும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.