சிரியாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 2 பேர் காயம்: அரசு கடும் கண்டனம்
|போரால் பெரிதும் பாதிப்படைந்த சிரியாவில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பொதுமக்களில் 2 பேர் காயமடைந்து உள்ளனர்.
டமாஸ்கஸ்,
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. கடந்த பல ஆண்டுளில் வேலை இல்லா திண்டாட்டம், போதிய மருத்துவ வசதி, உணவு பற்றாக்குறை என சிரியா அதிகளவில் பாதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பிரிவினையை தூண்டும் செயல்களில் மட்டுமே அரசு மொத்த கவனமும் வைத்திருந்தது.
இதனால் கிளர்ச்சியாளர்கள் பெருகினர். அவர்கள் அரசுக்கு எதிரான போரில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை அழிக்கும் வேலையில் ஆசாத் அரசு இறங்கியது. அரசுக்கு உதவியாக ரஷ்ய உள்ளிட்ட வல்லரசுகள் களமிறங்கின.
சிரியாவில் 2012ம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல லட்சக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், உள்நாட்டு போரால் அதிகம் பாதிக்கப்பட்ட சிரியாவில் இஸ்ரேலிய படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், அந்நாட்டின் வடமேற்கே டார்டவுஸ் மாகாணத்தில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சிரியாவில் உள்ள பொதுமக்களில் 2 பேர் காயமடைந்து உள்ளனர்.
இஸ்ரேல் அரசு, மத்திய தரைக்கடல் பகுதியின் மேற்கே லெபனானின் திரிபோலி நகரில் இருந்து, டார்டவுஸ் நகரின் தெற்கே ஹமிதியா நகர் பகுதியில் உள்ள கோழி பண்ணைகளை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளது. சிரியாவின் கடலோர கிராம பகுதியில் நடந்துள்ள இந்த தாக்குதலை பற்றி சிரியாவின் ராணுவ வட்டாரம் தெரிவித்து உள்ளது.
இதில், பொருள் இழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் அனைத்தும் ஈரானுடன் தொடர்புடைய இலக்குகள் ஆகும் என இஸ்ரேல் எப்போதும் கூறி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று இந்த தாக்குதல் நடந்துள்ளது.
எனினும், சிரியாவில் பயங்கரவாத குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் செயல்படுகிறது என தாக்குதலுக்கு தொடர்ச்சியாக கண்டனம் தெரிவித்து வரும் சிரிய அரசு கூறி வருகிறது.