காசாவில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 16 பேர் பலி
|இஸ்ரேலின் சிறப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில், மேற்கு கரை பகுதியில் வாகனத்தில் சென்ற பாலஸ்தீனிய இளைஞர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
காசா,
இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.
ஓராண்டை கடந்து நடந்து வரும் மோதலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில், காசாவின் வடக்கே ஜபாலியா நகரில் பெய்த் லாஹியா பகுதியில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் புலம்பெயர்ந்த குடும்பத்தினர் சிலர் பாதுகாப்பு கோரி அடைக்கலம் புகுந்துள்ளனர்.
இந்த சூழலில், இஸ்ரேல் ராணுவத்தினர் இந்த பகுதியில், வான்வழி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில், மருத்துவமனையில் தஞ்சமடைந்து இருந்த பொதுமக்களில் 16 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதேபோன்று மேற்கு கரை பகுதியில் நாப்லஸ் என்ற இடத்தில் வாகனத்தில் சென்ற பாலஸ்தீனிய இளைஞர்கள் மீது இஸ்ரேலின் சிறப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில், அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர்.