'ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் படையெடுக்கும்' - நெதன்யாகு சபதம்
|ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் நிச்சயமாக படையெடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஜெருசலேம்,
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே சுமார் 7 மாதங்களாக மோதல் நீடித்து வருகிறது. காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 34 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனிடையே இருதரப்பினருக்கும் இடையே போர்நிறுத்தம் மற்றும் அகதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதே சமயம் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கப்போவதாக கூறி உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தனது இலக்கின் இறுதிக்கட்டமாக ரபா நகரை குறிவைத்துள்ளது. ரபா நகரில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அடைக்கலம் புகுந்துள்ள நிலையில், அங்கு இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தினால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் நிச்சயமாக படையெடுக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ரபா நகரில்தான் ஹமாஸ் அமைப்பினர் முகாமிட்டு தாக்குதல் நடத்தி வருவதாகவும், போரில் முழு வெற்றியை பெற்றே தீருவோம் எனவும் நெதன்யாகு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.