< Back
உலக செய்திகள்
காசாவில் இருந்து வெளியேற பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை; மறுபரிசீலனை செய்ய ஐ.நா. வலியுறுத்தல்
உலக செய்திகள்

காசாவில் இருந்து வெளியேற பொதுமக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை; மறுபரிசீலனை செய்ய ஐ.நா. வலியுறுத்தல்

தினத்தந்தி
|
14 Oct 2023 10:53 AM IST

காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற எச்சரிக்கையை இஸ்ரேல் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.

நியூயார்க்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த வாரம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சூழலில், பொதுமக்களை தாக்குதல் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரித்துள்ளது. தொடர்ந்து, தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது.

இதுபற்றி ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரெஸ், தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தெரிவித்துள்ள செய்தியில், சிறு நோட்டீசை கொடுத்து அதிக அளவிலான மக்களை வெளியேற வேண்டும் என வலியுறுத்துவது மனிதநேயம் சார்ந்த பாதிப்புகளை விளைவிக்கும் என தெரிவித்து உள்ளார்.

இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது ஆபத்து நிறைந்தது என்றும் ஆழ்ந்த பிரச்சினையை உருவாக்க கூடும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதன்படி, ஐ.நா. ஊழியர்கள் மற்றும் 2 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் வெளியேற வேண்டும். அவர்கள் பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் கிளினிக்குகள் உள்பட ஐ.நா. அமைப்புகளின் இடங்களில் தஞ்சமடைய வேண்டும்.

இதில் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் அடங்குவார்கள். அவர் குறிப்பிடும்போது, எரிபொருள், உணவு மற்றும் நீர் உள்பட மனிதநேய உதவிகள் காசாவுக்கு சென்றடைவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

இதற்கு முன் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் நேற்று கூறும்போது, பொதுமக்கள் வீடுகளில் இருந்து பாதுகாப்புக்காக, வாடி காசா பகுதிக்கு தெற்கே செல்லும்படி கேட்டு கொண்டது.

எப்போது திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறதோ அப்போது மட்டுமே திரும்ப வேண்டும் என்றும் படைகள் தெரிவித்தன. இஸ்ரேலுடனான பாதுகாப்பு வேலி பகுதியை அணுக வேண்டாம் என்றும் மக்களை கேட்டு கொண்டது.

மேலும் செய்திகள்