< Back
உலக செய்திகள்
ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி: ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்
உலக செய்திகள்

ஹவுதி தாக்குதலுக்கு பதிலடி: ஏமனில் குண்டுமழை பொழிந்த இஸ்ரேல்

தினத்தந்தி
|
30 Sept 2024 1:22 AM IST

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தொடர் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது.

சனா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது.

அதேபோல், ஹமாஸ் ஆயுதக்குழுவினர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பணய கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 100க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பணய கைதிகளாக உள்ளனர்.

அதேவேளை, இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதேபோல், லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வந்தனர். இதையடுத்து, லெபனான் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது. கடந்த சில நாட்களாக லெபனான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் தலைவன் நஸ்ருல்லா உள்பட 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுஒருபுறமிருக்க இஸ்ரேல் மீது ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில், கடந்த ஜூலை மாதம் 19ம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா துறைமுகம் மீது கடந்த ஜூலை 20ம் தேதி இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் சற்று குறைந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது டிரோன், ஏவுகணை தாக்குதல்களை நடத்தினர். இதற்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இஸ்ரேல் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது.

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ள ஹூடைடா துறைமுகம், எண்ணெய் சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்