< Back
உலக செய்திகள்
இஸ்ரேல்-துருக்கி இடையே மீண்டும் தூதரக ரீதியில் உறவு தொடக்கம்

Image Courtesy: AFP

உலக செய்திகள்

இஸ்ரேல்-துருக்கி இடையே மீண்டும் தூதரக ரீதியில் உறவு தொடக்கம்

தினத்தந்தி
|
22 Aug 2022 8:45 PM IST

இஸ்ரேல் - துருக்கி இடையே பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தூதரக ரீதியில் உறவு ஏற்பட்டுள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் துருக்கிக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு மேலாக தூதரக ரீதியிலான மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனியர்கள் விவகாரத்தில் இந்த மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

அந்த வகையில், இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் - பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது பாலஸ்தீனியர்கள் 60 பேர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து இஸ்ரேல் உடனான தூதரக உறவை துருக்கி முறித்துக்கொண்டது. இதையடுத்து, துருக்கியுடனான தூதரக உறவை இஸ்ரேல் முறித்துக்கொண்டது. இரு நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்பப்பெற்றன. பல ஆண்டுகளாக இந்த பிரச்சினை நீடித்து வந்தது.

இதனிடையே, கடந்த மார்ச் மாதம் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹர்சொக் துருக்கி அதிபர் தையுப் எர்டோகனை துருக்கி தலைநகர் அங்காராவில் சந்தித்தார். இந்த சந்திப்பை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், இஸ்ரேல் - துருக்கி இடையே மீண்டும் முழு அளவிலான தூதரக உறவு தொடங்கியுள்ளது. இதன் மூலம் விரைவில் துருக்கி தூதரகம் இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் திறக்கப்பட்டு தூதரக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். அதேபோல், இஸ்ரேலின் தூதரகம் துருக்கியின் அங்காராவில் திறக்கப்பட்டு தூதரக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும், வர்த்தம் உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் இணைந்து செயல்பட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல ஆண்டுகளாக இஸ்ரேல் - துருக்கி இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மத்திய கிழக்கு பகுதியில் அமைதியை நிலை நிறுத்த வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்