< Back
உலக செய்திகள்
ஈரானை நேரடியாக தாக்குவோம்.. இஸ்ரேல் மிரட்டல்

இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் கட்ஸ் 

உலக செய்திகள்

ஈரானை நேரடியாக தாக்குவோம்.. இஸ்ரேல் மிரட்டல்

தினத்தந்தி
|
10 April 2024 4:01 PM IST

ஈரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று மீண்டும் சூளுரைத்தார்.

ஜெருசலேம்:

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிழல் யுத்தம் நடந்து வருகிறது. இப்போது இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா (லெபனான்) அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதவிர ஏமனின் ஹவுதி கிளர்ச்சி குழு மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுவும் இஸ்ரேலை குறிவைக்கின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்துகிறது.

இந்நிலையில், சிரியாவின் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணை தூதரகம் கடந்த 1-ம் தேதி தாக்கப்பட்டது. வெடிகுண்டு விழுந்து வெடித்ததில் தூதரகத்தில் இருந்த ஈரான் ராணுவத்தைச் சேர்ந்த 2 முக்கிய தளபதிகள் உள்பட 7 பேர், சிரியாவைச் சேர்ந்த 4 பேர், ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் என 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம்சாட்டி உள்ள ஈரான், பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தது.

ஈரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு காரணமான இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கப்போவதாக ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி இன்று மீண்டும் சூளுரைத்தார். இந்த பேரழிவை ஏற்படுத்திய இஸ்ரேலை மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவும், பிரிட்டனும் தடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் செய்யவில்லை. அவர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றவில்லை, என்றும் அவர் கூறினார்.

இதையடுத்து இஸ்ரேல் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது பகுதியில் இருந்து இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினால், தக்க பதிலடி கொடுப்பதுடன் ஈரான் மீது நாங்கள் நேரடியாக தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் கட்ஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்