< Back
உலக செய்திகள்
இஸ்ரேல்:  வீணாகும் உணவு பொருட்களின் மதிப்பு ரூ.51,740 கோடி என அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

இஸ்ரேல்: வீணாகும் உணவு பொருட்களின் மதிப்பு ரூ.51,740 கோடி என அதிர்ச்சி தகவல்

தினத்தந்தி
|
10 Jan 2024 10:40 AM IST

உணவு தேவையாக உள்ள மக்கள் இடையே உணவு பாதுகாப்பின்மையை உண்மையில் மோசமடைய செய்வதற்கு வழிவகுக்கும் என்று அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையொன்றில், இஸ்ரேலில் ஆண்டுதோறும் ரூ.51,740 கோடி மதிப்பிலான உணவு பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

அந்நாட்டில் காணப்படும் பொருளாதார சூழலானது, சுகாதார உணவுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. இதனால், 14 லட்சம் மக்கள் உணவு பாதுகாப்பற்ற நிலையில் வசித்து வருகின்றனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

இஸ்ரேலில் காணப்படும் உணவு பாதுகாப்பற்ற சூழலால் கடந்த 2022-ம் ஆண்டில் சுகாதாரத்திற்கு என்று கூடுதலாக ரூ.11,645 கோடி செலவிடப்பட்டு உள்ளது. இது அந்நாட்டின் தேசிய சுகாதார செலவினத்தில் 5 சதவீதம் ஆகும்.

அந்த அறிக்கையின்படி, 2022-ம் ஆண்டில் 26 லட்சம் டன் அளவிலான உணவு பொருட்கள் இஸ்ரேலில் வீணாக தூக்கி எறியப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக, சுற்றுச்சூழலுக்கு ஆன செலவினம் ஆண்டுதோறும் ரூ.8,734 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

இதனால், 6 சதவீதம் அளவுக்கு பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் நடைபெறுகிறது. உணவு வீணாவதில் இருந்து தடுக்கப்பட்டு அதன் செலவினம் குறையும்போது, எரிசக்தி, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றின் பல்வேறு வளங்கள் பாதுகாக்கப்படும் சாத்தியம் ஏற்படும்.

அதனுடன், பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றமும் குறையும். காற்று மாசுபாடும் குறையும். கழிவு மேலாண்மைக்கான செலவுகளும் கூட குறையும்.

காசா போரால் இஸ்ரேலை சேர்ந்த லட்சக்கணக்கான குடும்பங்கள் அவர்களுடைய வீடுகளை காலி செய்து விட்டு வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்தனர். இது, இஸ்ரேலின் பொருளாதார பாதிப்புக்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது. இதனால், உணவு தேவையாக உள்ள மக்கள் இடையே உணவு பாதுகாப்பின்மையை உண்மையில் மோசமடைய செய்வதற்கு வழிவகுக்கும் என்று அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்