ஹமாஸ் அமைப்பின் நூற்றுக்கணக்கான இலக்குகள் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்
|காசா முனையின் அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது.
காசா,
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து, அந்த பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.
இந்த சம்பவத்தில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அவர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது. 25-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட செய்தியில், நாங்கள் வடக்கு காசா பகுதி மீது கவனம் செலுத்தி வருகிறோம். ஆனால், காசா முனையின் அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் தொடர்ந்து வருகிறது என தெரிவித்து உள்ளது.
இதில், நள்ளிரவில் அதிரடியாக ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் நூற்றுக்கணக்கான இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது என இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளரான டேனியல் ஹகாரி, சி.என்.என்.னுக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடப்பட்டபோது, அதனை நேற்று நிராகரித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இது போருக்கான தருணம் என குறிப்பிட்டார்.
இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் இதுவரை 8,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.