இஸ்ரேல் தாக்குதல் - ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் மரணம்
|ஹசன் நஸ்ரல்லா, ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக 32 வருடங்களாக இருந்து வந்தார்.
பெய்ரூட்,
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி இஸ்ரேல் நாட்டின் மீது திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, உடனடியாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக களம் இறங்கிய லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர்.
அதற்கு பதிலடியாக லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை தொடுத்தது. இஸ்ரேல் கடந்த 4 நாட்களாக லெபனான் மீது பயங்கரமான முறையில் வான்வழி தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் மக்கள் கொத்து, கொத்தாக கொன்று குவிக்கப்படுகின்றனர். இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் ஒரே வாரத்தில் லெபனானில் 700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் நேற்று [வெள்ளிக்கிழமை] லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாஹியே பகுதியில் அமைந்துள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டடங்கள் மீதும் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா [64 வயது] உள்ளிட்டோரைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. நேற்று [வெள்ளிக்கிழமை] இரவு முதல் நஸ்ரல்லா காணாமல் போன நிலையில் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து இதுவரை குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஹசன் நஸ்ரல்லா, ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக 32 வருடங்களாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.